விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது, பாராளுமன்ற தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி காமராஜர் சிலை முன்பு, சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அசோகன் தலைமையில், ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. அசோகன் பேசும்போது, தற்போது இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமலாக்கத்துறை ரெய்டு வருகிறது. பிரதமர் மோடியின் தவறுகளை சுட்டிக் காட்டினால் சிபிஐ சோதனை நடக்கிறது.
அதானியின் தொடர்பு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று முழக்கமிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்குள் வருவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது என சர்வாதிகாரப் போக்கில் ஒன்றிய மோடி அரசு நடந்து வருகிறது. ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக சந்தித்து வெற்றி பெறும். மீண்டும் ராகுல்காந்தியின் சிம்மக்குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். எத்தனை தடைகளை ஒன்றிய மோடி அரசு ஏற்படுத்தினாலும், அவற்றையெல்லாம் தூசி என துடைத்தெறியப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். பாசிச ஒன்றிய மோடி அரசிற்கு காங்கிரஸ் கட்சியும், இந்திய மக்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் எனறு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை கண்டித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி