சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.03.2023) நேரில் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவ்வூராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றையதினம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஊராட்சியின் சார்பில் 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி எஸ்.சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி ரெ.மாலதி, திரு.விஜயகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி