விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே, மலைமேல் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு பின்பு உத்திரம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருப்பதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும். மேலும் இன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், சதுரகிரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று காலை 6 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். 7 மணியளவில், பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். நாளை பங்குனி மாத பௌர்ணமி மற்றும் நாளை காலை வரை உத்திரம் நட்சத்திரம் இருப்பதால், நாளையும் சதுரகிரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி