இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சியில் (20.04.2023) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பட்டணம்காத்தான் ஊராட்சி, ஓம்சக்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள கட்டடங்கள் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து சேதுபதி நகர் முதல் தெருவில் ரூ.23.24 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி துவங்கி உள்ளதை பார்வையிட்டு வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சேதுபதி நகர் நீரேற்று நிலையம் சீரமைக்கும் பணி மற்றும்
குடிநீர் குழாய் புதிதாக நீடிப்பு செய்யும் பணி ரூ.23.19 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள
உள்ளதையொட்டி அதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டு
அனுமதிக்கப்பட்ட இப்பணியினை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென
அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள்
அறிவுறுத்தினார். பின்னர் பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா பகுதிக்கு சென்று வெளிப்புறப் பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டதுடன், இப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் பட்டணம்காத்தான் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சித்ரா மருது அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி