இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (26.04.2023) இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற வழக்காடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தேசிய அளவில் திருச்சியில் நடைபெற்ற அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் ரம்யா,காவ்யதர்ஷினி,பொன்ராஜம் ஆகியோர் கொண்ட குழு சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றதற்கு மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தவுடன் மேலும் மாணவிகளிடம் போட்டியின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்பொழுது மாணவிகள் தெரிவிக்கையில் திருச்சியில் மாநில அளவில் அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தேசிய அளவிலான தமிழ் குற்றவியல் வழக்காடுதல் போட்டி 2023க்கு நடைபெற்றது. இப்போட்டியில் மூன்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் குழுவாக சேர்ந்து பங்கேற்பார்கள். அதனடிப்படையில் இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் இருந்து நாங்கள் கலந்து கொண்டோம்.போட்டிகள் ஏப்ரல் 22 மற்றும் 23 என இரண்டு நாட்கள் நடைபெற்றது,இதில் சிறந்த வக்கீல்,சிறந்த பெண் வக்கீல்,ஆகிய போட்டிகளுக்கு சிறப்பாக வாதிட்டு மாநில அளவில் பங்கேற்ற 14 கல்லூரி மாணவ, மாணவியர்களில் எங்களுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்கள்.
மாநில அளவில் முதலிடம் பெற்ற அரசு சட்டக் கல்லூரி மாணவிகளை பாராட்டி இதேபோல் சிறப்பாக செயல்பட்டு கல்லூரிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜேம்ஸ் ஜெயபால் அவர்கள் கலந்து கொண்டார்.