இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (22.05.2023) புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டு தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பணிக்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக பிறந்த இடத்திற்கு மீண்டும் வருவதே ஒரு பெருமை. அந்த அளவிற்கு நான் முதல் முதலாக 2015-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பணியாக இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியராக சுமார் 2 ஆண்டுகள் பணியாற்றினேன். அதனை தொடர்ந்து நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சார் ஆட்சியராகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளராகவும், தற்பொழுது சென்னையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையாளராக பணியாற்றி முதன் முறையாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இன்று பதவி ஏற்று உள்ளேன்.
அரசின் திட்டங்களை கடைக்கோடி கிராமங்கள் வரை கொண்டு சென்று அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவேன். குறிப்பாக இதற்கு முன் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சிறப்பான பணிகள் தொடர்ந்து செயல்படுத்துவது மட்டுமின்றி, மேலும் சிறப்புடன் செயல்படுத்துவேன். அதேபோல் இந்த மாவட்டம் எனக்கு பிறந்த வீடு போல் ஒரு பெருமை உண்டு. காரணம் நான் முதல் முறையாக அரசு பணிக்கு வந்து பணியாற்றியது இந்த மாவட்டத்தில் தான்.
தற்பொழுது மீண்டும் இதே மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவராக வந்திருப்பது தாய் வீட்டிற்கு வந்தது போல் உள்ளது. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை மக்களின் தேவை என்ன என்பதை நன்கு அறிவேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்த பொழுது கூட அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் திட்டங்களை சிறப்பாக
செயல்படுத்திட கேட்டுக்கொண்டார்கள். அதன்படி சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற முறையில் அனைத்து துறைகளுக்கும் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன். நாள்தோறும் என்னை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பொதுமக்களுக்கு உரிய தீர்வு கிடைத்திட செயல்படுவேன். என்னை பொறுத்தவரை பொதுமக்கள் நேரடியாக சந்திக்க எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அது மட்டுமின்றி தொலைபேசியிலும் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதிலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ப சிறப்பாக செயல்படுவேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி