விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், பெ.புதுப்பட்டியில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய, இலவச மருத்துவ முகாமினை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. எனவே, மாவட்டத்தில் பெரும்பாலான 40 வயதிற்கு மேற்பட்டவர்களை பரிசோதனை செய்ய வசதியாக, அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 40,000 ஆயிரம் நபர்களுக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற நோய்களை போல் ,தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவற்றை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் இருதயம், கண், சிறுநீரக உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புக்கும் அளவிற்கான விளைவுகள் உள்ளது. எனவே, 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், இது போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாமினை பயன்படுத்தி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, துணைஇயக்குநர்கள்(சுகாதாரப்பணிகள்) மரு.யசோதாமணி(விருதுநகர்), கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் நிர்வாக துணைத்தலைவர்கள் சஞ்சய் சுந்தரம், நாராயண பிள்ளை, மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி