சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் ஆகியோர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காரைக்குடி நகராட்சிப்பகுதிக்கான ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொடங்கி வைத்து – சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில், ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல்.இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ தாஸ் மீனா,இ.ஆ.ப.,அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி,இ.ஆ.ப.,அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா,இ.ஆப.,அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திட்டவிளக்கவுரையாற்றினர். இந்நிகழ்வில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்தவகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென, நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் வணிக நிறவனங்களிடமிருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவமைக்கப்பட்டு, திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் நிறைவு நடைபெற்றுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நகராட்சிகளில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகளும், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான வாகனங்களும், ரூ.9.99 கோடி மதிப்பீட்டில் எல்இடி தெருவிளக்குகளும், ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளும், ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகளும், ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் பூங்காக்களும், ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மின் மயானங்களும், ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்களும், ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் சந்தைகளும், ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அலுவலகக் கட்டிடங்களும், ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்களும், ரூ.20.06 கோடி மதிப்பீட்டில் இதரப்பணிகளும் என ஆக மொத்தம் ரூ.91.56 கோடி மதிப்பீட்டில் நகராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் மேற்கண்டவாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கூடுதலாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேபோன்று, சிவகங்கை மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளில், ரூ.49.32 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகளும், ரூ.0.72 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான வாகனங்களும், ரூ.3.64 கோடி மத0;பீட்டில் எல்இடி தெருவிளக்குகளும், ரூ.40.32 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகளும், ரூ.22.73 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகளும், ரூ.0.77 கோடி மதிப்பீட்டில் பூங்காக்களும், ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மின் மயானங்களும், ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்களும், ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் அலுவலகக் கட்டிடங்களும், ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்களும், ரூ.25.49 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும், ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் இதரப்பணிகளும் என ஆக மொத்தம் ரூ.163.35 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் மேற்கண்டவாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், ரூ.1752.73 கோடி மதிப்பீட்டில் 16.12 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 1 குடிநீர் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. ரூ.360.00 கோடி மதிப்பீட்டில் 2.66 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 1 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இன்றையதினம் பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் 1.39 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மொத்தம் ரூ.2252.86 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மொத்தம் ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காரைக்குடி நகர்மன்றத் தலைவர் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்துள்ளனர். அக்கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் தவிர்த்து, கூடுதலாக சிவகங்கை மாவட்;டத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார் இந்நிகழ்வில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், தொலைநோக்குப் பார்வையுடன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்திடும் வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் மட்டுமன்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரைக்குடி நகராட்சியானது முதல்நிலை நகராட்சியாகும். மொத்தம் 36 வார்டுகளை கொண்டதாகும். இந்நகராட்சிப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரைக்குடி நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதற்கென, தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கென, இன்றையதினம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 1.39 இலட்சம் மக்கள் பயன்பெறவுள்ளனர். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் நகராட்;சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளுக்கு ரூ.91.56 கோடி மதிப்பீட்டிலும், 11 பேரூராட்சிகளுக்கு ரூ.163.35 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.2252.86 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்று தமிழகம் முழுவதும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சீர்மிகு துறையாக இத்துறை விளங்கி வருகிறது. இதுபோன்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்ந்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதிகளுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் திரு.சே.முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ந.குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் திரு.சேங்கைமாறன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் திரு.வி.ரகுபதி, மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திரு.க.சரவணன், நகராட்சி ஆணையாளர் திரு.வீரமுத்துக்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திருமதி ஜீவலதா, உதவி செயற்பொறியாளர் திருமதி பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி