சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.89 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் (10.07.2023) சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆஷா அஜித்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தையும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும், முதன்மையான முதலமைச்சராகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய கடமையும் அரசிற்கு உள்ளது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், அவர்களின் தேவையின் அடிப்படையிலும் திட்டப்பணிகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்திடும் பொருட்டு, செவரக்கோட்டை ஊராட்சியில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக்கிட்டங்கியும், கள்ளிப்பட்டு ஊராட்சியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவுக்கூடமும் மற்றும் கண்டரமாணிக்கம் ஊராட்சி ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடமும், தனியார் பங்களிப்புடன் (கண்டரமாணிக்க வளர்ச்சிக்குழு) ரூ.11.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான கட்டிடமும், குன்றக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் ரூ.5.64 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியும் என மொத்தம் 5 முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.43.89 இலட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டரமாணிக்கம் ஊராட்சியில் மட்டும் நமக்கு நாமே திட்டம் 15வது நிதிக்குழு மானியத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி, ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 68 பணிகள் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். குறிப்பாக, இப்பகுதியை சேர்ந்த திரு.மாதவன் அவர்களது குடும்பத்தினர் சார்பில் 28.5சென்ட் இடம் அரசின் பயன்பாட்டிற்கு தற்போது வழங்கியுள்ளனர். அதன் வாயிலாக, அவ்விடத்தில் படிப்பு பயிற்சி மையம் ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர கண்டரமாணிக்கம் வளர்ச்சிக்குழுவின் சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குறியதாகும்.
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.மாம்பட்டி ஊராட்சியிலுள்ள ஒப்பிலான்பட்டியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் கூடுதல் அடிப்படை தேவைகளை மேம்படுத்திடும் பொருட்டு, தங்களது பகுதிகளுக்குட்பட்ட, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது நேரடியாக எனது கவனத்திற்கோ எடுத்துரைக்கும் வகையில், அக்கோரிக்கையின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வு காணலாம் என மாண்புமிகு கூட்டுறவு அமைச்சர் திரு.கேஆர். பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.இரா.சிவராமன், கோட்டப்பொறியாளர் (பரமக்குடி, நபார்டு மற்றும் கிராம சாலைகள்) திரு.ஆர்.முரளிதர், உதவி கோட்டப்பொறியாளர் திரு.சென்றாயன், உதவி பொறியாளர் திரு.தவநிதி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற் பொறியாளர் திருமதி லதாதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.கணேசன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சொர்ணம் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திருமதி அ.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி மஞ்சரி லெட்சுமணன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் திருமதி ராமு (கண்டரமாணிக்கம்), திரு.இளம்பரிதி (கள்ளிப்பட்டு), திரு.சுப்பிரமணியன் (செவரக்கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.செழியன், திரு.சுந்தரம் அரசு அலுவலர்கள், தொழிலதிபர் திரு.மணிகண்டன் (கண்டரமாணிக்கம் வளர்ச்சிக்குழு) பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி