சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வண்ணம் அகலப்படுத்தப்பட்ட சாலையில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்தனர். மதுரையிலிருந்து திருப்பத்தூர் வழியாக காரைக்குடி செல்லும் சாலையில் அண்ணாசிலை அருகே ஏற்கனவே வேகத்தடை இருந்தது. அண்மையில் அண்ணா சிலை அருகில் இருந்து கோட்டையிருப்பு வரை சுமார் 3 கிலோ மீட்டரில் புதிய பாலங்கள் மற்றும் சாலை அகலப்படுத்தப்படும் பணி நடைபெற்றதால் அந்த வேகத்தடை அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பணி நிறைவுற்று சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, இச்சாலையில் தினமும் அதிகளவில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. அடிப்படைத் தேவைகளுக்காகவும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பொதுமக்கள் அடிக்கடி இந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
மேலும் இந்த சாலையோரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், வங்கிகள், கடைகள், அங்காடிகள், பெட்ரோல் பங்க், தாலுகா அலுவலகம் செல்லும் வழி, தொழுகை நடத்தும் பள்ளிவாசல், கோயில் என பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்பதால் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. நான்கு ரோடு சந்திக்கும் இந்த இடத்தின் அருகில் வேகத்தடை எதுவும் அமைக்கப்படாததால், பொதுமக்கள், மாணவர்கள் சாலையைக் கடப்பது மிகவும் சிரமமாகவும், அச்சமளிப்பதாகவும் இருந்தது. அதிவேகத்தில் வரும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமல் செல்வதால், எந்தநேரத்திலும் விபத்து நேரக்கூடிய சூழ்நிலை நிலவியது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும், வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டும் வந்தது. இதை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் என உலக ஒருங்கிணைந்த மத நல்லிணக்க குழு நிறுவனர் எம்கேஎம்.ரபிக் மற்றும்
பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கையும் விண்ணப்பங்களும் அளித்து வந்தனர். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் வேகத்தடை அமைத்தனர். இந்நிலையில் விபத்து ஏற்படுவது கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி