விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,626 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக 1,739 மாணவர்களுக்கு (01.08.2023) மிதிவண்டிகள் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.ஒரு காலத்தில், வசதிகள், போதிய விழிப்புணர்வு இன்மையால்;, பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே பெரிதாக நினைக்கும் காலம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, தாங்கள் சிரமப்பட்டாலும், குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, நல்ல ஒரு எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் இருக்கின்றது.
அதன் விளைவாக ஆண்களை விட பெண்கள் அதிகமாக படிக்க கூடிய அளவுக்கு இன்றைக்கு சமுதாயம் முன்னேறி இருக்கிறது. பெண் குழந்தைகள் ஆண்களை விட அதிகமாக மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில் உறுதியான வாழ்க்கை என்ற சூழலை தயார் படுத்திக் கொள்வதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர், கல்வி மற்றும் சுகாதாராம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டில் 7,699 மாணவர்களுக்கும் 9,982 மாணவிகளுக்கும் என மொத்த 17,681 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1207 மாணவர்கள், 1378 மாணவிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 850 மாணவர்கள், 1191 மாணவிகள் என 4626 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசால் வழங்கப்படும், மிதிவண்டி மாணவர்களுக்கு படிக்கும் காலம் வரையிலும், படிப்பதற்கு பின்பும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாரும் பயன்பெறும்.
படிக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசு தயாராக உள்ளது. என, அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் மூலமாக நமது மாவட்டத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் முக்கியமான எழுத்தாளர்கள் மிதிவண்டி குறித்த பல்வேறு கதைகளை எழுதியிருக்கிறார்கள். மிதிவண்டி குறித்து பெரும்பாலான எழுத்தாளர்களின் முக்கிய நோக்கம் அது தரும் தன்னம்பிக்கை சுதந்திரம் தான். மனிதனின் சுதந்திரத்தினுடைய ஒரு முக்கிய வடிவம் மிதிவண்டி. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக யாருடைய உதவியுமின்றி செல்ல முடிகிறது.
மிதிவண்டி ஒரு உலோக கருவி அல்ல, உங்களுக்கான தன்னம்பிக்கையையும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கும், வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வதற்கும் பயன்படக் கூடிய ஒரு வாகனம். இந்த மிதிவண்டிகளை மாணவச் செல்வங்களுக்கு இலவசமாக வழங்குவதின் நோக்கம், அவர்கள், வீடுகளில் இருந்து பள்ளிக்கும், மற்ற பணிகளுக்கும் செல்லும் போது ஒரு தன்னம்பிக்கை அளிக்கிறது. இதனை பெறக்கூடிய மாணவர்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொ) முத்துக்கழுவன், நகர்மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி(அருப்புக்கோட்டை), குருசாமி (சாத்தூர்), ஊராட்சி ஒன்றிக்
குழுத்தலைவர்கள் சசிகலா(அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரைராஜ் (சாத்தூர்) உட்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி