விழுப்புரம் : புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று, அரவிந்தர் ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு சென்றார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், விழுப்புரம் ஆட்சியர் பழனி, எஸ்.பி. சஷாங்க் சாய், கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். மாத்ரி மந்திரில் தியானம் ஆரோவில்லுக்கு வந்த குடியரசுத் தலைவர் அங்குள்ள மாத்ரி மந்திரி மையத்தில் அமர்ந்து, சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர், தனது பயணத்தின் நினைவாக மரக்கன்று நட்டார். ஆரோவில்லின் சிறப்புகளை எடுத்துரைக்கும் கண்காட்சியை பார்வையிட்டார். குழு நடனத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: 1990-களில் சுமார் 3 ஆண்டுகள் ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் கவுரவ ஆசிரியராக பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
நான் அங்கு கற்பித்ததைவிட கற்றுக் கொண்டது அதிகம். அடுத்த வாரம் சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில், அரவிந்தரின் 150-வது பிறந்தநாளும் கொண்டாடப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் சுதந்திரம் குறித்து, ஸ்ரீ அரவிந்தர் நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் தனது கனவுகளை கோடிட்டுக் காட்டும் ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தினார்.‘ இந்தியாவின் ஆன்மிகத்தை உலகுக்கு கடத்த வேண்டும்’ என்று கனவு கண்டார். ‘உலகமே இந்தியாவை நோக்கி நம்பிக்கையுடன் திரும்புகிறது’ என்று எழுதினார். இன்றைய உலகில் இந்தியா உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்று அரவிந்தர் கூறியது, இன்று பிரதிபலிக்கிறது. இன்றைய உலகத்தில் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம் போன்ற கருத்துகளை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த கருத்துகள் மனிதர்களை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்கள், இயற்கை மற்றும் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியது.
ஆரோவில் உண்மையில் மனித ஒற்றுமை மற்றும் ஆன்மிக பரிணாமத்தை ஊக்குவிப்பதில் தனித்துவமாக விளங்குகிறது. இந்த உலகளாவிய நகரத்தை 2 பெரிய ஆத்மாக்கள் அமைத்தன. மனிதனை, தெய்வீக மனிதர்களாக மாற்ற ‘சூப்பர்-மைண்ட்’ உதவும் என்று அரவிந்தர் நம்பினார். இந்த உலகை தெய்வீகமாக ஆக்கும் வல்லமை அதீத மன உணர்வுக்கு உண்டு என்ற தத்துவத்தை அவர் வழங்கினார். ஆரோவில்லில் பின்பற்றப்படும் ஆன்மிக நோக்கங்கள் முழு மனிதகுலத்தின் நலனுக்காகவே உள்ளன. அரவிந்தரால் முன் வைக்கப்பட்ட ஒரு பிரபஞ்சம் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். ‘காஸ்மிக்’ கருத்தை புரிந்து கொள்வதன் மூலமும், ஏற்றுக்கொள்வதன் மூலமும் இன்று உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை இணக்கத்துடன் தீர்க்க முடியும். சர்வதேச அளவிலான சவால்களுக்கு நீடித்த தீர்வுகளை வழங்குவதில் உலகை வழி நடத்த இந்தியா தயாராக உள்ளது.
இந்த முயற்சியில் ஆரோவில் பெரும் பங்களிப்பை வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், புதுச்சேரி திரும்பிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஹெலிகாப்டரில் சென்னைக்கு சென்றார். டெல்லி திரும்பினார் முர்மு 4 நாள் பயணமாக கடந்த 5-ம் தேதி தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 6-ம் தேதி சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, ராஜ்பவன் தர்பார் அரங்குக்கு பாரதியார் பெயர் சூட்டுதல் ஆகிய விழாக்களில் பங்கேற்றார். பின்னர் புதுச்சேரி சென்ற அவர், நேற்று மாலை மீண்டும் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட குடியரசுத் தலைவர் முர்முவை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முப்படை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.