மதுரை : மதுரை விமான நிலைய வளாகத்தில், தேனீக்கள் கூடு கட்டியதால் தற்காலிகமாக பயணிகள் புறப்பாடுக்கு செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மதுரை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை நடைபெறுகிறது. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ என மூன்றுக்கும் மேற்பட்ட விமான சேவை நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றது.
இதில், சராசரியாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் புறப்பாடு மற்றும் பயணிகள் வருகைக்கு என, தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளது. இதில், பயணிகள் புறப்பபாடுக்கு செல்லும் நுழைவு வாயில் மேற்புறத்தில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளதால் தற்போது அந்தப் பாதை மூடப்பட்டுள்ளது. எனவே, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும் பிரத்தியேக வழியில் தற்போது பயணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் , தற்போது தேனீக்கள் கூடு கட்டி உள்ள பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்த பின்னர் மீண்டும் பயணிகள் புறப்பாடு வழியாக அனுப்பப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி