திருவள்ளூர் : விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்த நிலையில், 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு எங்கே எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு எங்கே, கட்டுப்படுத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையை குறை உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியும், ஒன்றிய அரசை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு