மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோழவந்தான் ரயில் நிலையம் பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள மேலக்கால் திருவேடகம் முள்ளி பள்ளம், சமயநல்லூர், தேனூர், பரவை, விளாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் ஓடியது. காலையில் வெயில் வாட்டி வந்த போதும் தற்போது பெய்துள்ள இந்த மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இருந்தாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மதுரை நகரில், அண்ணாநகர் வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, சித்திவிநாயகர் கோயில் தெருக்கள் குளம் போல மழைநீர் சாக்கடை நீருடன் தேங்கியுள்ளன. இதை மதுரை மாநகராட்சி பொறியாளர்கள் சீரமைக்க, இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி