திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆரணி தமிழ் காலணியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று எலுமிச்சை பழங்களை பறித்து ஒத்தடம் கொடுக்க பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் (cool pack) சேர்ந்து ஜூஸ் தயாரித்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் தவறுதலான ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்த சிறுவர்கள் உள்ளிட்ட 13பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அருகே ஆரணியில் 13 பேர் எலுமிச்சை சாறு அருந்தியதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் சிகிச்சை பெற்று வரும் 13பேரும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்தார். ஒத்தடம் தரும் ஐஸ் கியூப் கலந்து குடித்ததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. என்றும் இன்று பிற்பகல் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறினார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரத்தவங்கி 15 நாட்களில் செயல்பட துவங்கும் எனவும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வின் போது பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி தி.முக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு