மதுரை : மதுரை கிழக்கு ஒன்றியம், எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில், உலக அஞ்சல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற அஞ்சல் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கலந்து கொண்டு அஞ்சல் தினம் தோன்றிய விதம், அஞ்சலகத்தின் தேவை, அஞ்சலக பணியாளர்களின் உழைப்பு, அஞ்சலக பிரிவுகள், அஞ்சலகத்தின் வெற்றி முதலியன குறித்து சிறப்புரையாற்றினார். சமூக ஆர்வலர் அசோக்குமார், பழங்காலத்தில் தபால்கள் சென்ற விதம், பல்வேறு வகையான தபால்கள், மாதிரிகள், மேலும் தபால் பெட்டி மாதிரி ஒன்றை செய்து காட்டி அதன் சேவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். உலக தபால் தினம் குறித்து வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தபால் கார்டு வழங்கப்பட்டு தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தபால் எழுதும் முறை, பெறுநர் முகவரி முதலியன குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுகுமாறன் நன்றி கூறினார். விழாவில், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி