திருவள்ளூர் : திருவள்ளூர் மீஞ்சூர் பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், தெருக்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பைகள் சேகரித்து தூய்மைப்படுத்தும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியாளர்களின் மேம்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணை தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களின் வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், பாதுகாப்பிற்கான திறன் பயிற்சியினை அளித்திட வேண்டும், பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும், சீரான இடைவெளியில் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் கருத்துக்களை கேட்டு கொண்ட பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் அதிகாரிகளிடம் பேசி படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பிரபாகரன், கோபி, அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு