திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் ஒரு பகுதியில் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படும் கிடங்கானது இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து துறைமுகத்திற்கு வந்து அங்கு சேமிப்பு கிடங்குகள் மூலம் திரவமயமாக்கப்பட்ட எரிவாயு சேமிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு மின்சாரம் தயாரிக்கவும் மற்றும் பல்வேறு உபயோகிப்பிற்காகவும் எரிவாய்வாக பயன்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் மூலம் ஆண்டொன்றிற்கு 5 மில்லியன் மெட்ரிக் தன்னாக இருந்து வந்த இறக்குமதி தற்போது பத்து மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அத்திப்பட்டு கலைஞர் அரங்கத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி, எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். மீஞ்சூர் பகுதியில் தொடர்ந்து காற்று மாசு மற்றும் நில மாசடைவதை எடுத்துரைத்த பொதுமக்கள் மாசுவை குறைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் எனவும் தொழிற்சாலையில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் சிமெண்ட் மற்றும் நிலக்கரி கழிவுகளால் நிலம் மாசடைவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மேலும் இயற்கை எரிவாயு திட்டத்தை வரவேற்பதாகவும் இந்த தொழிற்சாலை மூலம் சமூக வளர்ச்சி மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு,துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், காட்டுப்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி கடலி, காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோதினி வினோத், வார்டு உறுப்பினர்கள் டில்லிபாபு, வான்மதி ராஜ், எண்ணூர் மீனவ மக்கள் நல சங்க தலைவர் குமரவேல், எண்ணூர் மீனவர் வெங்கட், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காட்டுப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபூபக்கர், மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், மீஞ்சூர் நகர தலைவர் அரவிந்த், வல்லூர் நந்தகுமார், இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் முதன்மை அலுவலர் பழனிவேல் மற்றும் இதர அலுவலர்கள் சம்பத்குமார் ,தனசேகரன் ,என்.ஆர்.ரெட்டி. மீஞ்சூர் குரு சல்மான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு