விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரோசடி தங்கம். இவர்களுக்கு கார்த்திக் (20). என்ற மகனும், மகேஸ்வரி (16). என்ற மகளும் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வரும் சரவணன், திருத்தங்கல்லில் சிறிய அளவில் பழக்கடை வைத்து வியாபாாரம் செய்து வருகிறார். இவர், தனது குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் படிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்போது, இவரது மகன் கார்த்திக், நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 2ம் ஆண்டு படித்து வருகிறார். மகேஸ்வரி, திருத்தங்கல்லில் உள்ள கே.எம்.கே.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அண்ணன் கார்த்திக் சிறு வயது முதலே திருத்தங்கல், ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகடாமியில் சேர்ந்து வளைபந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதைப் பார்த்து, மகேஸ்வரியும் அவருடன் சேர்ந்து வளைபந்து விளையாட்டில் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொண்டார். அண்ணன், தங்கை இருவரும் தனித்தனியாகவும், இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். முதலில் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற இவர்கள், பின்னர் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான வளைபந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளனர்.
இது வரை சுமார் 500க்கும் மேற்பட்ட வெற்றி பதக்கங்கள், வெற்றி கோப்பைகள், வெற்றி சான்றிதழ்கள் என, இவர்களின் வீடு முழுவதும் வெற்றி கோப்பைகளால் நிறைந்திருக்கிறது.
இதனையடுத்து, மாணவர் கார்த்திக்கும், மாணவி மகேஸ்வரியும், தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெறும் சர்வதேச வளைபந்து விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். தமிழ்நாடு அளவில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், இவர்கள் இருவருமே தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வாரம், சர்வதேச வளைபந்து போட்டிகள் தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் பிரிட்டோரியாவில் நடைபெற்றது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட மாணவி மகேஸ்வரி தனி நபர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் முதலிடம் பிடித்து 2 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். மாணவர் கார்த்திக், ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். சர்வதேச வளைபந்து போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பில் அதிக வெற்றிகளை மகேஸ்வரியும், கார்த்திக்கும் பெற்றுள்ளனர்.
இது குறித்து வெற்றியாளர் மகேஸ்வரி கூறும்போது, சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு எனது பெற்றோரும், அண்ணனும் மிகவும் துணையாக இருந்தனர். மேலும், எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பயிற்சிகளையும் ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர்களும், பயிற்சியாளர்களும் சிறப்பாக வழங்கினர். இது வரை பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தது தான் முக்கிய காரணம். மேலும் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, இந்தியா நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும், நான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி