விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ,கழிவு நீர் வாறுகால்களை சீரமைக்கும் பணிகள், தெருக்களின் உள் பகுதிகளில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள், தெருக்களில் புதிய எல்.இ.டி விளக்குகள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சிவகாசியின் மையப் பகுதியில் உள்ள 37வது வார்டு பகுதியான முஸ்லீம் நடுத்தெரு, பாவடித்தோப்பு மற்றும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் அலங்கார வளைவு பகுதிகளில் சுமார் 20 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் குண்டும், குழியுமாக இருந்து வந்தது. சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, இந்தப் பகுதியில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயினுலாபுதீன், மகேஸ்வரி, துணைப் பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி