விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருவில்லிபுத்தூர் அருகே, மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலையில் லட்சுமியாபுரம் – நுர்சாகிபுரம் இடையே ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப் பாதை வழியாக நுர்சாகிபுரம், இடைய பொட்டல்பட்டி, அழகு தேவேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், துலக்கன்குளம், கங்காகுளம், கண்ணார்பட்டி ஆகிய ஊர்களுக்கு பேருந்து மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது. மழைக் காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
மேலும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றால், இந்த வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. கடந்த நவம்பர் மாதம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி இந்தப் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் இது வரை மாற்றுப் பாதை ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம், திருவில்லிபுத்தூர் பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக, ரயில்வே சுரங்கப் பாதையில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்தப் பாதை வழியாக சென்று வரும் பொதுமக்கள், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதனையடுத்து,வன்னியம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாற்றுப் பாதை கேட்டு வலியுறுத்தி பள்ளியை புறக்கணித்து, ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் வன்னியம்பட்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை சமாதானம் செய்தனர். விரைவில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி