சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் வசிக்கும் பொது மக்களுக்கு நியாய விலைக்கடை, தாய் கிராமமான அணைக்கரைப்பட்டியில் உள்ளது. இரண்டு கிராமங்களுக்கும் இடையே 31/2 கிலோ மீட்டர், தூரம் இருப்பதால், பாரதி நகர் பொதுமக்கள் அணைக்கரைப்பட்டி நியாய விலைக்கடைக்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். எனவே தங்கள் பகுதியில், ஒரு பகுதி நேர நியாய விலைக்கடை திறக்கப்பட வேண்டுமென அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அணைக்கரைப்பட்டி ஊராட்சித் தலைவராக போட்டியிட்டு வென்ற சரவணன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதி நகர் பகுதியில் தனியாக ஒரு நியாய விலைக்கடை அமைத்துத் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பனிடம், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி, இருவரின் பரிந்துரையின் பேரில் பாரதி நகரில் பகுதிநேர நியாய விலைக்கடைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை பாரதி நகரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி நடந்த விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பகுதி நேர நியாய விலைக்கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேல், சரக துணைப்பதிவாளர் (காரைக்குடி) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், வட்டாட்சியர் கயல்செல்வி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், துணைத்தலைவர் ரஹ்மத் நிஷா, கவுன்சிலர்கள் கணேசன் மற்றும் பாரதி, வட்ட வழங்கல் அலுவலர் நேரு, சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் அம்பலமுத்து மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர். மேலும் இதே நிகழ்வில், 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ₹.37.88 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 59 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அமைச்சர் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி