சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,
கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக்
கூட்டத்தில், சிறப்பு பார்வையாளராக பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், தட்டட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், தலைமை வகித்து நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர், புதிய அறிவிப்பின்படி, நவம்பர் – 1 உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக்கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதில், அனைத்து ஊராட்சிகளிலும் கிராமச் சபைக் கூட்டம் இன்றையதினம் நடைபெறுகிறது.
டாக்டர்.கலைஞர், ஆட்சிக்காலத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய 4 நாட்களில் கிராமச்சபைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தது.
கிராமத்தில் நடைபெற்ற பணிகள், அப்பணியின் முன்னேற்றம், புதியதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்து மக்களுடன் கலந்து கலந்துரையாடி செயல்படுத்துவதற்கென ஆண்டிற்கு நான்கு முறை கிராமச்சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர், ஆண்டிற்கு 6 முறை கிராமச்சபைக் கூட்டங்கள் நடத்திட சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தற்சமயம் அறிவித்துள்ளார்கள். இவ்வறிவிப்பு ஊரக வளர்ச்சித்துறைக்கும், உள்ளாட்சி அமைப்பிற்கும் புத்துயிர் ஊட்டியுள்ளது. கிராமச்சபைக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் தங்களின் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கின்றனர். இதனை ஊராட்சியைச் சார்ந்த பொதுமக்கள் கருத்தில் கொண்டு அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெறலாம். ஒரு வளமான கிராமத்தை உருவாக்குவதற்கு மக்களுடன் இணைந்து இணக்கமான முறையில் பணியாற்றி, கிராமத்தின் வளர்ச்சிக்கு தங்களை முழுயாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவது ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவரின் கடமையாகும்.
இந்த கிராமச்சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமே, மகாத்மாகாந்;தி ஏற்கனவே குறிப்பிட்டது போல் கிராமங்கள் தான் ஒரு நாட்டிற்கு முதுகெலும்பு எனக் கூறினார். அதுபோல் ஒரு நாடு வலுவான வல்லரசு நாடாக வளர வேண்டும் என்றால் கிராமங்கள் வளர்ச்சி பெற்றவைகளாக, தன்னிறைவு பெற்றவைகளாக பொருளாதார ரீதியாக கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய எல்லாவற்றிலும் கிராமங்களில் இப்படிப்பட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் ஒரு நாடு வளர்ச்சி பெற்ற நாடாக கருதப்படும்.
சிறு நகராங்கள், பெருநகரங்கள், மாநகரங்கள் என்று நகரங்கள் மட்டும் வளர்ச்சி பெற்று வசதி வாய்ப்புகள் அதிகம் பெற்று இருந்திருந்தால், தமிழ்நாடு என்றும் விரிந்து பரந்து இருக்கும் மக்கள் முழுவதும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தான் குடியேற முடியும். அதனால் மக்கள் தொகை நெருக்கடிகள் அதிகமாகும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியாது என்பதன் அடிப்படையில்தான், நகரங்களுக்கு இணையான வசதிகளை கிராமங்களில் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இப்படி ஒரு அமைப்பை உருவாக்குகிறது.
இந்த கிராமச் சபைக் கூட்டம் என்பது மக்கள் தங்களுடைய தேவைகளை அறிந்து, அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு அமைப்பு தேவை. அந்த அமைப்பில் யாரை அமரச் செய்வது என்பதற்காகதான் பல்வேறு கட்டங்களாக செயல்பட்டு, நமது இந்திய நாடு ஒரு ஜனநாய நாடு. அந்த ஜனநாயக நாட்டில் மூன்று கட்ட அலகுகளாக நிர்வாகங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று உள்ளாட்சிகள் அமைப்பு. இந்த உள்ளாட்சிகள் அமைப்புக்களில் பங்கேற்பது, அன்றாட மக்களை வீதிகளில் இருக்கக்கூடிய கிராமங்களில் உள்ள மக்களைச் சந்திக்க வாய்ப்பினை பெற்றவர்கள் அந்த அமைப்பில் வகுப்பு எடுக்க வருவார்கள்.
அதனடிப்படையில் ஒரு வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் பணியில் தட்டட்டி ஊராட்சியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் 6 வார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த வார்டுகளில் உள்ள மக்களுக்கு உரிமை உண்டு. இந்த கிராமச் சபைக் கூட்டத்தின் நோக்கம் வருகின்ற நிதி வரவு செலவுகள் எல்லாம் முறையாக பராமரிப்பதாகும். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என 3 உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளது.
கிராம ஊரக நிர்வாகத்தை மேம்படுத்தினால் நாட்டின் வளர்ச்சி மேம்படுத்தப்படும் என்ற அடிப்படையில், தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தட்டட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டிற்கு மேலக்குடியிருப்பில் மெட்டல் சாலை,
சிமெண்ட் சதலை மெட்டல் சாலை, தனிநபர் உறிஞ்சுகுழி, சமுதாய உறிஞ்சுகுழி அமைத்தல் ஆகியப் பணிகளுக்கு ரூ.25.17 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வூராட்சியில் தனிநபர் வரப்புக்கட்டுதல், சிமெண்ட் சாலை, ஓரக்கு மெட்டல் சாலை, சமுதாயக்கூடம் அருகில் வடிகால் அமைத்தல், மரக்கன்று நடுதல், முருங்கை தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சாலை முதல் தட்டட்டி சாலை வரை சிமெண்ட் ரோடு அமைத்தல், கூடுதல் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் மற்றும் சமுதாய கழிப்பறை அமைத்தல் நடைபெற்று வருகிறது.
மேலும், நர்சரி தோட்டம், தடுப்பணை, சிமெண்ட் ரோடு, பேவர் பிளாக் சாலை மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுவர்ச்சுவர் அமைத்தல், மாட்டுத்தொட்டி, மழைநீர் சேகரிப்பு தொட்டி, மண்புழு உரக்கூடாரத்தை சுற்றி முள்வேலி அமைத்தல், ஊராட்சி நர்சரி தோட்டத்தில் புதிய கூடுதல் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் மற்றும் சிமெண்ட் தொட்டி, பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல், புதிய மேல்நிலைத்தொட்டியிலிருந்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல், குளியல் தொட்டி, திருமண மண்டபம் அருகில் சமையல் கூடம் அமைத்தல், தார் சாலை, புதிய போர்வெல் மற்றும் கைபம்பு அமைத்தல், நூலகக் கட்டிடம் பராமரித்தல் போன்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று முடிவுற்றுள்ளது.
மேலும், இக்கிராம மக்கள் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு, பிளாஸ்டிக் இல்லாத தமிழகமாக உருவாக்குவதற்கென நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். மேலும், ஊராட்சிகளின் சார்பில் குப்பைக்கழிவுகளை தங்களது இடங்களுக்கு வருகை தரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். குறிப்பாக, கிராமச் சுகாதாரத்தினை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகம் மற்றும் பொதுச் சொத்துக்களை முறையாக பராமரித்திட வேண்டும்.
ஊராட்சியின் வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை வழங்க அரசு தயார்நிலையில் இருந்து வருகின்றன. பொதுமக்களாகிய நீங்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரவிட்டார்.
இச்சிறப்பு கிராமச்சபைக் கூட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 162 உறுப்பினர்களுக்கு ரூ.43,10,000 மதிப்பீட்டில் வங்கிக்கடன் இணைப்பிற்கான காசோலைகளும், 6 உறுப்பினர்களுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலைகளும், 6 உறுப்பினர்களுக்கு ரூ.60,000
மதிப்பீட்டில் நலிவுற்ற தன்மை குறைப்பு நிதிக்கான காசோலைகளும் என மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ.46,70,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 உதவித் தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், கொரோனா காலக்கட்டத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்கான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து, 1 குடும்பத்தைச் சார்ந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.3,00,000 வீதம் மொத்தம் ரூ.6,00,000 க்கான காசோலைகளையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 1 பயனாளிக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 1 பயனாளிக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.10,000
மதிப்பீட்டில் திருமண உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு இலவச பட்டாவிற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.1,00,000
மதிப்பீட்டில் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு 1,50,000 மதிப்பீட்டில் நலத்திட்டங்களையும், பொது சுகாதாரத்துறையின் சார்பில், 5 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் மற்றும் 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 10,000 மதிப்பீட்டில் மருந்துப் பெட்டகங்களும்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு கார்டுகளும், ஊராட்சித்துறையின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 6 தூய்மைக் காவலர்கள், 1 தூய்மைப் பணியாளருக்கு கேடயங்களும், 2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கேடயங்களும்,
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், பணியில் இருந்த போது இறந்தவர்களின் 2 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் என மொத்தம் 220 பயனாளிகளுக்கு ரூ.55,90,000 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சி.பிரபாகரன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) (பொ) தனபால், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) கு.அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அ.சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சு.தனலெட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி