மதுரை : பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மதுரை மருத்துவ கல்லுாரி ஐ.எம்.ஏ. வளாகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை 1922ல் நிறுவப்பட்டு அதன் நூற்றாண்டு விழாவானது தற்போது மாநில அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த (03.11-2022), அன்று அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மண்டலவாரியாக மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டு போட்டிகள் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றது. நூற்றாண்டு ஜோதி (Torch Light) அனைத்து மாவட்டத்திற்கும் வலம் வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு நூற்றாண்டு ஜோதி இன்று வந்ததை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா மருத்துவக் கல்லூரி ஐ.எம்.ஏ.வளாகத்தில் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பொது சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மகப்பேறு உதவியாளர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என சுமார் 100 நபர்களுக்கு நினைவுப்பரிசுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் மதுரை மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி கொரோனா தொற்று நோயால் இன்னுயிர் நீத்த மருத்துவர் சண்முகப்பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கல்பனாசாவ்லா விருது வழங்கப்பட்டது. அவர்களை பாராட்டும்விதமாக நினைவுப் பரிசினையும், 46 முறை இரத்ததானம் வழங்கிய லேப் டெக்னீசியன், செந்தில் கணேஷ் அவர்களுக்கும் நினைவுப்பரிசினை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.
இறுதியாக மண்டல அளவில் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான நடைபெற்ற செஸ், கேரம்போர்டு, கபடி, டென்னிஸ், கோலப்போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 550 நபர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அர்ஜீன்குமார், துணைமேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, சரவண புவனேஸ்வரி, வாசுகி, சுவிதா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் சையது முஸ்தபா கமால், .ஆறுமுகம், கல்வி அலுவலர் திருநாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் திருமகேஸ்வரன், உதவி நகர் நல அலுவலர் மருதினேஷ்குமார், சுகாதாரக்குழுத் தலைவர் ஜெபராஜ், மண்டல மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி