மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்குபருவமழை வருகின்ற ஒன்பதாம் தேதி அதாவது நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்றே கனமழை பெய்ய தொடங்கி விட்டது. இதனால், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் சோழவந்தான் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் போதிய பேருந்து வசதி இல்லாததால், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சோழவந்தானில், ரயில்வே மேம்பால பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், சோழவந்தானில் உள்ள பேருந்து நிலையமும் திறக்கப்படாமல் உள்ளதால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தற்காலிக பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை, பள்ளி முடிந்த பின்பு சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஆனால் ,போக்குவரத்து துறை சார்பில் போதிய பேருந்து வசதி செய்யப்படாததால், மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர். எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அருகில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். அதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மாணவிகளுக்காக சோழவந்தானிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் மற்றும் செக்கானூரணி, வாடிப்பட்டி ,சமயநல்லூர் போன்ற பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று
மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி