மதுரை : மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடை ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழக அரசின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை. அதை வெளிப்படுத்தும் விதமாகவே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என, பேசி வருகிறார்” என்றார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு,
“அ.தி.மு.க எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம். கூட்டணிக்கு, எப்போதும் அதிமுக தான் தலைமை ஏற்கும். அதிமுக கூட்டணியை நம்பி வருகிறவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம்” என கூறினார். பாஜக வளர்ந்து விட்டதாக, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, “அமைச்சர் துரைமுருகன் பயந்து விட்டார் என நினைக்கிறேன். அவரிடம், ஏற்கனவே ரெய்டு நடந்துள்ளது. துறை ரீதியான சில புகார்களும் உள்ளன எனவே அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.
அதிமுகவை பொறுத்த வரை தமிழ்நாடு திராவிட பூமி. இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும்” என தெரிவித்தார். திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கருத்து குறித்த கேள்விக்கு,
“ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இப்போது ஒன்றாகத் தான் உள்ளோம்.
அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு மீண்டும் பிரிந்தவர்கள் இணைவதும் வழக்கம் தான்.
எனவே, பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வேண்டும். அப்போது தான் விடிவுகாலம் கிடைக்கும். எதிர்காலத்தில் எதுவும் எப்படியும் மாறலாம்” என குறிப்பிட்டார். இதில், நிர்வாகிகள் முன்னாள் துணை மேயர் திரவியம், வில்லாபுரம் ராஜா, பரவை முன்னாள் பேரூராட்சித்தலைவர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் சத்திய மீனாட்சி ஜெயக்குமார், குடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி திருக்குமரன், சோலைராஜா, தாராப்பட்டி கிளைச் செயலாளர் மாயாண்டி, கொடி மங்கலம், கருப்பண்ணன், வெற்றிவேல், தலைவர் பரிபோக்கு, இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமரன், முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி