விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், கடந்த வாரம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு.க கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி என்பவர், அதிகாரிகள் பணிகள் செய்வதற்கு லஞ்சம் கேட்பதாகவும், பொதுமக்கள் சார்பில் தானே அந்தப் பணத்தை தருவதாக கூறி 1 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த அதிகாரியிடம் இந்த லஞ்சப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மாமன்ற கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சியின் நிருபர் வைத்தியலிங்கம் படம் பிடித்து செய்தியாக்கினார். இதனால் நிருபர் வைத்தியலிங்கத்தை, மாநகராட்சியின் திருத்தங்கல் பகுதி வருவாய் ஆய்வாளர் (பொ) கருப்பசாமி பாண்டியன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவரது லேப்டாப், கேமிரா உள்ளிட்ட பொருட்களை அவரிடமிருந்து பறித்து வீசினர். மாநகராட்சி அதிகாரிகள் தாக்கியதால் காயமடைந்த வைத்தியலிங்கம், ஏற்கனவே இருதய நோய் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர். தான் இருதய நோயாளி என்று கூறியதைக் கேட்ட பின்பும் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிருபர் வைத்தியலிங்கம், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அதிகாரிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிருபர் வைத்தியலிங்கத்தை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார் பேசும்போது, திமுக மேயர், திமுக துணை மேயராக இருக்கும் சிவகாசி மாநகராட்சியில் ஊழல் குறித்து திமுக கட்சியைச் சேர்ந்த உறுப்பினரே குற்றச்சாட்டை கூறினார். இதனை நிருபர் வைத்தியலிங்கம் செய்தியாக வெளியிட்டார். வழக்கமாக திமுக தனது கட்சியினரை ஏவிவிட்டு, தனக்கு எதிராக பேசுபவர்களை, கருத்து சுதந்திரத்தை நொறுக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். தற்போது அந்த வேலையை அதிகாரிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். நிருபர் வைத்தியலிங்கத்தை தாக்கிய, மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனை உடனடியாக கைது செய்ய வேண்டும். நிருபர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். நிருபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். உடன் விருதுநகர் மேற்கு மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி