விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்திபெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணிகள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் சுரேஷ் ,தலைமையில் நடைபெற்றது. கோவிலில் உள்ள 11 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 36 லட்சத்து, 26 ஆயிரத்து, 919 ரூபாய் பணமும், 175 கிராம் தங்கமும், 395 கிராம் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓம்சக்தி பக்தர்கள் குழுவினர், அய்யப்பா சேவா சங்க பக்தர்கள் கலந்து கொண்டனர். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி