விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா, விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37வது புத்தகக் கண்காட்சியை, சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா, இன்பம் துவக்கி வைத்தார். புத்தகக் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சி தொழிலதிபர் கணேஷ்குமார் தலைமையில், பிரபல மருத்துவர் ஞானகுருசாமி முன்னிலையில் நடைபெற்றது. நேசனல் புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, வரவேற்றார். புத்தக விற்பனையை, மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்தார். முதல் விற்பனையை அரசு கலைக் கல்லூரி முதல்வர் காந்திமதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுருகன், இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணசாமி, அச்சுப்பணியாளர் சூரியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகக் கண்காட்சியில், குழந்தைகளுக்கான புத்தகங்கள், பெண்கள் அதிகம் விரும்பும் புத்தகங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள், ஆன்மிகம், அரசியல், சமூக சிந்தனையை தூண்டும் பல்வேறு புத்தகங்கள், சமையல், கோலம், சிறுகதைகள் புத்தகம், கதைகள், புகழ்பெற்ற நாவல்கள், ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் ஜனவரி 3ம் தேதி வரை நடைபெறுகிறது என்று கண்காட்சி நிர்வாகிகள் கூறினர். நேசனல் புக் ஹவுஸ் மதுரை கிளை மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி