விருதுநகர் : சிவகாசி தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு, ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, பொதுமக்கள் அனைவரும் சிரமங்கள் இல்லாமல் பொங்கல் தொகுப்புகளை வாங்குவதற்கு வசதியாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் 143 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1 லட்சத்து, 16 ஆயிரத்து, 024 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
சிவகாசி பகுதியில், பொங்கல் தொகுப்புகள் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, சிவகாசி வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வரும் 9ம் தேதி முதல், ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் இருப்பு வைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி