மதுரை : மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில், உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சோழவந்தான் ரயில் நிலையம் தற்போதும் தமிழக அளவில் சிறிய நகரங்களில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வைகை, குருவாயூர், நெல்லை, மைசூரு ஆகிய நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆறு பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கிறது. சோழவந்தான் மட்டுமின்றி, விக்கிரமங்கலம், உசிலம்பட்டி ,செக்கா னூரணி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கிருந்து ரயிலில் சென்று வருகின்றனர். ஆனால், இந்த ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்தாததாலும், சமூக விரோதிகளின் அட்டகாசத்தாலும் பயணிகள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.
சோழவந்தான் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த ததால், பிளாட்பாரப் பகுதிகளை பராமரிக்காமல், சிமெண்ட் இருக்கைகள்,குடிநீர் தொட்டிகள்,வேலி தடுப்புகள் நொறுங்கி கிடக்கின்றன. இங்கு பத்துக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் இருந்தும் மூன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. கழிப்பறைகள் திறக்கப்படுவதில்லை.மேலும், இரவில் ரயில் வரும்போது மட்டுமே பிளாட்பாரங்களில் மின் விளக்குகளை போடுகின்றனர். அதுவும் பாதி அளவு மட்டுமே ஒளிருவதால் பின்புற பெட்டிகளில் இறங்குபவர்கள் இருளில் தடுமாறுகின்றனர். பிற பிளாட்பாரங்களிலும் விளக்குகள் இல்லாததால், திறந்தவெளி மதுபாராக மாறிவிடுவதுடன்,சமூக விரோதிகள் உடைத்து வீசும் காலி பாட்டில்கள் பயணிகளின்கால்களை பதம் பார்க்கிறது. குற்றங்களை தடுக்க வேண்டிய ரயில்வே போலீசாரும் ரோந்து பணிகளை செய்வதில்லை. இந்த ரயில் நிலையத்தை தரம் உயர்த்துதல்,பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் நின்று செல்ல ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த வருடம் இங்கு ஆய்வுக்கு வந்த ரயில்வே பொது மேலாளரிடம் முன் வைத்தோம். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சோழவந்தான் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி