மதுரை : சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2020 மற்றும்
ஏப்ரல் 2021- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குமார் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் ஒருங்கிணைப்போடு, கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் தலைமை விருந்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முக்கியஸ்தர்கள் முறையாக பட்டமளிப்பு விழா மேடைக்கு ஊர்வலமாக சென்றனர். பிரார்த்தனை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் பட்டமளிப்பு விழாவை, கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த , துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குமார் பட்டமளிப்பு விழா உரை ஆற்றினார். முறையாக துறைத்தலைவர்கள் அந்தந்த துறையின் பட்டதாரிகளின் பெயர்களை வாசிக்க 453 பட்டதாரிகள் சிறப்பு விருந்தினரிடமிருந்து பட்டங்களை பெற்றுக் கொண்டனர். அடுத்த நிகழ்வாக, முதல்வர் வெங்கடேசன் பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியினை பட்டதாரிகளுக்கு வாசிக்க , பட்டதாரிகள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் சஞ்சீவி மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். பெற்றோர்கள், தாய்மார்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி