விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மம்சாபுரம் பகுதியில் உள்ள கண்மாய்கள் பலவற்றிலும் மதகுகள் பழுதடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, முறையாக வேலை பார்க்காத அதிகாரிகளுக்கு எதற்கு சம்பளம், வேலை பார்க்காத அதிகாரிகள் எதற்கு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று விவசாயிகள் காட்டமாக பேசினர். இதனால் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோபமாக பேசிய விவசாயிகளை கோட்டாட்சியர் விஸ்வநாதன் அமைதி படுத்தினார். பின்னர் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகள் குறித்து விவசாயிகள் பேசினர். மேலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கண்மாய்களை அந்தப்பகுதி மக்கள் கண்காணித்து பராமரித்து, பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கண்மாய்களில் மீன் பிடிப்பதற்கு குத்தகை விடப்படுகிறது. மீன்பிடி குத்தகை முறையை ரத்து செய்துவிட்டு, அந்தந்த பகுதி கிராம மக்களே கண்மாய்களில் மீன் பிடித்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பின்னர் தங்களது பகுதியில் உள்ள குறைகள் குறித்து, கோட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி