மதுரை : மதுரையில் மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடத்திற்கு 26 கோடிக்கான கட்டட பணிகளை சு. வெங்கடேசன் எம்.பி துவக்கிவைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 3 வது கேந்திரிய வித்யாலயா பள்ளி மதுரை இடையபட்டியிலுள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட துவங்கியது. இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் வகையில் அப்பகுதியில் 26 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான கட்டிட பணியினை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் துவக்கி வைத்தார். அந்த விழாவில், எம்.பி. பேசுகையில், நாடாளுமன்றத்தின் கல்வி நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் கடுமையான போராட்டத்தை நடத்தி மதுரை மாவட்டத்திற்கான மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளியை பெற்று வந்தேன். இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கட்டித்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். இந்தப் பின்னணியில் பள்ளி துவங்கிய அடுத்த ஆண்டே பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒப்புதல் கிடைத்துள்ளது. சில இடங்களில் பள்ளி துவக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் தற்காலிக கட்டிடத்தில் தான் பள்ளி செய்லபடுகிறது. ஆனால், நமது மதுரையில் பள்ளி துவங்கி ஒரே ஆண்டில் புதிய கட்டிடத்துக்கு ரூ 26.33 கோடி செலவில் கட்டிடம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது. இக்கட்டிடப் பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவு பெறும். இந்த நேரத்தில் நான் ஒன்றிய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி கட்டடப்பணியை துவக்கிவைத்தார். இந்நிகழ்வில், பள்ளியின் முதல்வர் பானுமதி, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் லெப் கமேண்டெட் மார்கண்டேவ் மற்றும் சி பி எம் தலைவர்கள் கலைச்செல்வன், மாயாண்டி ஆகியோர் பங்கெடுத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி