விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனிப் பொங்கல் தேரோட்டம் நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர் சுற்றி வர இருக்கும் நான்கு ரத வீதிகளிலும் கழிவுநீர் வாறுகால் கட்டும் பணிகள், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக மாறிக் கிடக்கிறது. இதனால் 4 ரதவீதிகளிலும் நடந்து செல்பவர்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காலையில் இருந்து, இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு இருந்து வருகிறது. பங்குனிப் பொங்கல் தேரோட்டம் நிகழ்ச்சிக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது.
சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் தேரோட்டம் நடத்துவது மிகவும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, 4 ரத வீதிகளின் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட (அரசு தொடர்பு பிரிவு) தலைவர் ஜெயக்கொடி தலைமையில் பாஜக கட்சியினர், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பத்தை நேரில் சந்தித்து, தேரோட்டத்திற்கு முன்னதாக ரதவீதிகளின் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். விரைவில் ரதவீதிகளின் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் உறுதியளித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி