சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், முழுவதும் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகள், குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது அபராதம் விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அங்கிருந்த ஒரு எண்ணெய் கடையில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பொருட்கள் 560 லிட்டர் பொருட்களில் அதன் உற்பத்தி தேதி மற்றும் அவற்றை எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் ஏதும் இல்லாததால் அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த கடைக்காரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் பெட்டிக்கடை, பல சரக்கு மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் நடத்திய சோதனையில் அந்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 10 கிலோ வரை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த கடை வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காலாவதியான பொருட்கள், பழக்கடைகளில் கார்பைடு கற்கள் பயன்படுத்துவது, இறைச்சி கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்யப்படுவது உள்ளிட்டவைகளை தீவிரமாக சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்தும், சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு அபாரத தொகை விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்து கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது திருப்பத்தூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், மேஸ்திரி மோகன் உள்பட பேரூராட்சி துப்புரவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி