திருப்பத்தூர் : திருப்பத்தூரில் யாதவா தொழிற்பயிற்சி மையத்தில் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி…வரை மாபெரும் இலவச பொது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் யாதவா தொழிற்பயிற்சி மையம், திருப்பத்தூர் ஸ்வீடிஸ் மிஷின் மருத்துவமனை, திருப்பத்தூர் மீனாட்சி ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இந்த பொது மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இலவச பொது மருத்துவ முகாமை சண்முகா ஜீவல்லர்ஸ் உரிமையாளர் பழனிவேல், யாதவா ITI தலைவர் ராமநாதன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். யாதவா ITI செயற்குழு உறுப்பினர் சக்திமோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். யாதவா தொழில் பயிற்சி மைய பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் ஏவிஎம்.சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாமில் பொது மருத்துவர்கள் சென்னையை சேர்ந்த ரேவதி, ஜனனி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் கௌதம் ராஜா, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வேதா, பல் மருத்துவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியும் இரத்த பரிசோதனை, குரூப் கண்டறியும் ரத்த பரிசோதனை, ரத்த அளவு, இசிஜி, செவித்திறன் அறியும் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு முடிவுகள் அறிந்து அதற்கேற்ற சிகிச்சை, ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதோடு காது, மூக்கு, தொண்டை, கண், பல், ஈறு உள்ளிட்ட நோய்களுக்கும் பரிசோதனை பார்க்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சமூக அமைப்புகள், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றினர். திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி