திண்டுக்கல் : வாரவிடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் படையெடுத்தனர். ஒரேநேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர், சீனிவாசபுரம், உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. கொடைக்கானல் மலையில், விடுமுறை வந்தால் பயணிகள் படையெடுப்பு வழக்கமாக உள்ளது. மேலும், சுற்றுலா தளமாக இருப்பதாலும், சீதோஷ்ண நிலை குளிராக காணப்படுவதாலும் கோடைக்காலங்களில் பயணிகள் இங்கு குவியத் தொடங்கியுள்ளனர். ஆகவே பயணிகளை வருகையை சமாளிக்க, மத்திய, மாநில அரசுகள், கொடைக்கானல் மலையில் கூடுதலாக பாதைகள் வாகனங்கள் செல்லக்கூடிய அளவில் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி