விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பது குறித்து புகார் தெரிவித்தனர். மண்டல தலைவர் குருசாமி பேசும்போது, மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை செய்வதற்காக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் எடுத்த நிறுவனம் குறைவான அளவில் தூய்மை பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதால் தூய்மை பணிகள் முற்றிலும் நடைபெறாத நிலையே உள்ளது. டெண்டரில் கூறியபடி தூய்மை பணிகள் செய்யப்படாததால், தனியாருக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சியில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை அமர்த்தி தூய்மை பணிகளை சீரமைக்க வேண்டும் என்று பேசினார். துணை மேயர் விக்னேஷ்பிரியா பேசும்போது, ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் எந்தப் பணிகள் அத்தியாவசியம், எந்தப் பணிகள் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்குத் தான் நன்றாக தெரியும். அதனால் வார்டுகளில் செய்யப்படும் பணிகள் குறித்து வார்டு கவுன்சிலர்களிடம் அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும். நடைபெறும் பணிகள் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்து ஆணையாளர் சங்கரன் பேசும்போது, நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று தான் அரசு விரும்புகிறது. அந்த அடிப்படையில் தான் மாநகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது. இனி சிவகாசி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்த தகவல்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் தெரிவிக்கப்படும் என்று கூறினார். திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த தி.மு.க, உறுப்பினர் ஸ்ரீநிகா பேசும்போது, திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் தேரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது. தேரோடும் ரதவீதிகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் 7 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் இந்த நிதி முறையாக செலவழிக்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக கண்காணித்து, தேரோடும் ரதவீதிகளின் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பேசினார். ரதவீதிகளின் சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும் என்று ஆணையாளர் சங்கரன் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி