நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் சிறப்பாக கவனித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து படத்திற்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து குட்டி யானைகளுடன், பொம்மன், பெள்ளி சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9-ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வந்து 2 பேரையும் பாராட்டினார். கடந்த 18-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பொம்மன், பெள்ளி சந்தித்தனர். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு பாகன் பொம்மன், பெள்ளியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
பாகன் தம்பதியினர் முதுமலைக்கு வரும்படி ஜனாதிபதியிடம் அழைப்பு விடுத்தனர். அப்போது வருவதாக ஜனாதிபதி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வருகிறார். இதற்காக அன்றைய தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பகல் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு 3.45 மணிக்கு ஜனாதிபதி வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பாகன்கள், ஆதிவாசி மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி