மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை சில தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அப்போது, பொதுமக்களில் சிலர் இந்த கால்வாயால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட போவதாகவும், ஆகையால் மேலக்கால் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி முதல் நிலையூர் கால்வாய் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவான ஒரு திட்டத்தை தயாரித்து கழிவுநீர் கால்வாய் பணிகளை தொடங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் காளியம்மன் கோவில் காமாட்சி அம்மன் கோவில் தெரு, காசி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் மழை காலங்களில் மழை நீர் புகுந்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.
ஊராட்சி நிர்வாகமோ மக்கள் பிரதிநிதிகளோ அதை பொருட்படுத்தாமல் அவசரக்கதியில் கால்வாய் கட்டும் பணியை முடித்தனர். தற்போது, மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில், நேற்று இரவு அரை மணி நேரம் பெய்த கன மழையால் மழை நீர் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் காளியம்மன் கோவில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். மேலும், நீண்ட நேரம் மழை நீர் வடியாததால் குழந்தைகளை வைத்திருப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும்,மழை பெய்ய ஆரம்பித்த உடன் மின்சாரமும் தடைபட்டதால் பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்குள் வரும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதுகுறித்து, பொதுமக்களில் சிலர் கூறும்போது
முழுக்க முழுக்க ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்றும், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாகவும், மேலும்
இது குறித்து , சில தினங்களுக்கு முன்பு ஊராட்சியின் தெற்கு பகுதியில் உள்ள ஓடை முதல் நிலையூர் கால்வாய் வரை உள்ள ஆக்கிரமங்களை அகற்றி கால்வாயை அகலப்படுத்த கோரியும்
ஓடையை காணவில்லை என்றும் போஸ்டர் ஒட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி மனு அளித்தோம். ஆனால்,இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்போது மழைக்காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அடை மழை காலம் ஆரம்பிக்க இருப்பதால் இனியாவது ஊராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை அகலப்படுத்தும் பணியை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவர்கள் கூறுகையில் இது குறித்து ஊராட்சி சார்பாக சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி