விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகில் பவுண்டேஷன் அமைப்பு சார்பாக, நிகில் பவுண்டேஷன் நிறுவனரும், ஒய்வு பெற்ற ஜி.எஸ்.டி அமைப்பின் ஆணையாளருமான நாகராஜ் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துகுமார் வரவேற்று பேசினார். முகாமில், தலைமை பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் பேசும்போது, பள்ளியில் படிக்கும் போதே எதிர்காலம் பற்றிய சிந்தனையும், அதற்கான செயல்பாடுகளையும் தொடங்கிட வேண்டும். அன்றைக்கான வேலைகளை அன்றே செய்து முடித்திட வேண்டும். வாழ்க்கையின் வளர்ச்சிக்கு திட்டமிடலும், அதற்கான செயலும் இருக்க வேண்டும். கல்வியில் சிறந்து உயர்ந்த நிலையை அடைந்துள்ளவர்களை உங்களது முன் மாதிரிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதில் நாம் பெருமை அடைவோம். இந்த பெருமையை அடைவதற்கான முயற்சிகளை இங்கிருக்கும் மாணவர்கள் எடுக்க வேண்டும். கல்வி ஒன்று தான் வாழ்க்கையின் உச்சத்தை தொடுவதற்கான ஒரே வழி என்று பேசினார். பயிற்சி முகாமில், ஜனனி இன்டர்நேஷசனல் குருப் இயக்குநர் ராமநாதன், வள்ளலார் தர்மசாலை பால்கனி, ராயல் சர்ஜிகல் மற்றும் அன்னை சந்தியா கண்தான கழக நிறுவனர் நாகலட்சுமி பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் நிகில் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த 16 பயிற்சியாளர்கள், 650 மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அன்பின் உறவுகள் அறக்கட்டளை மற்றும் அன்னை சந்தியா கண்தான கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி