விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பயன்களை கூறும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கைவினை கலைஞர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெசவு தொழில், மண்பாண்டம் தயாரித்தல், கட்டிட கலை உள்ளிட்ட 18 வகை கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, கைவினை கலைஞர்கள் தான் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள். அவர்கள் இல்லையென்றால் பாரதத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றங்கள் நடந்திருக்காது. ஒரு நாட்டின் வளர்ச்சியே பாரம்பரிய தொழில்கள் காப்பாற்றப்பட்டு அவை மேன்மேலும் வளர்வதில் தான் அடங்கியிருக்கிறது. நமது பாரதப் பிரதமர் மோடி பராம்பரியத்தின் மேல்கொண்ட அபரிமிதமான அக்கறையினால் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த திட்டத்தைக் கூட சில அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல், தவறாக பேசி வருகின்றனர்.
இந்த திட்டம் குலக்கல்வி திட்டம் என்று பேசுகின்றனர். பாரம்பரியமான தொழில்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் என்ன தவறு உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட போது, முதல் பாராட்டுகளை பெற்றவர்கள் விஸ்வகர்மாவினர்கள். இந்த திட்டத்தின் நோக்கம் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தான், இங்குள்ள தலைவர்கள் சிலர் அரசியலாக பார்க்கின்றனர். என்று ஆளுநர் பேசினார். நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் விஸ்வகர்மா திட்ட நிர்வாகிகள், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் நிகழ்ச்சிக்கு பின்பு சிவகாசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு ராஜபாளையம் – சிவகாசி சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி