விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் அசோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழ்நாடு காலண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கற்பகா ஜெய்சங்கர் தலைமையில் இன்று காலை, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து, தொகுதி உறுப்பினர் அசோகனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவில், தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் 430 சதவிகிதம் உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பீக்ஹவர்’ கட்டணமாக 15 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும், சோலாருக்கான நெட்ஒர்க் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காலண்டர்கள் உற்பத்தியாளர் சங்கம், மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு பாடநூல் அச்சடிப்போர் சங்கம் மற்றும் தொழில் நிறுவன சங்கங்கள் உட்பட 9 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை செய்து தருவதாக எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி