மதுரை : மதுரை மாவட்டம், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசு திருக்கோவிலுக்கு, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்கராக கருமுத்து தி. கண்ணன் பல ஆண்டுகள் இருந்து வந்தார். அவர் இறந்த பிறகு, தக்கராக மதுரை அறநிலையத்துறை துறை இணை ஆணையர் செல்லதுரை இருந்து வந்தார். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், தொழில் அதிபர் மூக்கன் அம்பலம் மகன் செல்லையா மற்றும் மூவரை அறங்காவலர் ஆக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை , தமிழக அறநிலையத் துறை செயலாளர் மணிவாசகன் பிறப்பித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில், இன்னும் பல திருக்கோவிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்படாமல், அரசு அதிகாரிகளே தக்காராக தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
மதுரை அருள்மிகு கூடலகப் பெருமாள் திருக்கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் திருக்கோவில், மதுரை மதனகோபால் சுவாமி திருக்கோவில், திருமோகூர் அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோவில், சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் உள்ளிட்ட கோவில்களுக்கு அறங்காவலர்கள் பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல், அரசு அதிகாரிகளே தக்காராக செயல்பட்டு வருகின்றனர். தமிழக அறநிலையத்துறையினர், உடனடியாக கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி