இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருட்களின் இருப்பு விவரம், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருட்கள் விபரம், வழங்கப்படும் ரசீதுகள் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடுபொருட்களுக்கான பட்டியல்கள், இடுபொருட்கள் பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இடுபொருட்கள் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வருகை தந்த விவசாயிகளிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் சரியாக வழங்கப்படுவது குறித்தும், கேட்டறிந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் சென்றடையும் வகையில் திட்டங்களை வகுத்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதனடிப்படையில் வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைத்திடவும், வேளாண் இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் போது காலதாமதமின்றி கிடைத்திட அலுவலர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி