திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாணார்பட்டி அருகே ரெட்டியபட்டியில் சமூக ஆர்வலர் பால் தாமஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைத்த நிதி மூலம் ஏழை பெண்ணிற்கு இலவசமாக கொடுக்கப்பட்ட சிறுதானிய அங்காடி திறப்பு விழா நடந்தது.
நத்தம் சாணார்பட்டி அருகே நொச்சி ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பால் தாமஸ். இவர் மரம் நடுதல், கொரோனா பாதிப்பு காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கவராயப்பட்டியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ஏழ்மை நிலையில் உள்ள மரியஜோதி என்ற பெண்ணிற்கு இலவசமாக சிறுதானிய அங்காடியை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இதற்காக பால் தாமஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ரூ.55 ஆயிரம் நிதி திரட்டி சிறுதானிய உணவு பொருட்கள், விதை பொருள்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடியை உருவாக்கியுள்ளனர். அங்காடிக்கு தேவையான பொருள்கள், கடைக்கான முன்பணம் அனைத்தும் அவர்களே கொடுத்து உதவியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜி.டி.என்., கல்லூரி பேராசிரியர் முருகானந்தம், திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுனில் குமார், அவரது மனைவி கல்யாணி, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ அதிகாரி மாறவர்மன், வெற்றி மொழி வெளியிட்டகத்தின் உரிமையாளர் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பினர் ஏற்கனவே வீடு இடிந்த மூதாட்டிக்கும், துப்புரவு பணியாளருக்கும் இரண்டு வீடுகள் அவர்களது சொந்த செலவில் கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. நிறைவாக பால் தாமஸ் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி