மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், இரண்டு நாட்கள் நடைபெற்ற “கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி – விஸ்ட்ரம் – 11 2023-2024” நிறைவு விழா நிகழ்வு , இறைவழிபாட்டுக்கூடத்தில், நடைபெற்றது. இந்நிகழ்விற்குச், சிறப்பு விருந்தினராக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் வேதியியல் துறைத்தலைவர் முனைவர் கே.பி.இளங்கோ, அறிவியல் கண்காட்சி நிகழ்விற்கு நிறைவுரை ஆற்றினார். இவ்வுரையில், வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் மொழியக் கூடியது திருக்குறள். அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதற்கு இனங்க அறிவு நம்மைப் பாதுகாக்கும் கருவியாக உள்ளது. அறிவைப் பற்றி படிக்கக் கூடிய அனைத்தும் அறிவியல் தான். ஆதலால் நம்மைச் சுற்றி நடக்கக் கூடிய செயல்கள் அனைத்தும் அறிவியல் என்பதை பொருண்மையாகக் கொண்டு இவ்வுரை அமைந்தது.
இந்நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். மேலும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச.சந்திரசேகரன் வரவேற்புரையும், வேதியியல் துறைத்தலைவர் பி.சேர்வாரமுத்து நன்றியுரையும், விலங்கியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் க.காமாட்சி தொகுப்புரையும் வழங்கினர். நிறைவு நாள் நிகழ்வில், மதுரை மாவட்டத்தில் உள்ள 54 கிராமப்புற பள்ளிகளில் இருந்து சுமார் 2,552 மாணவ மாணவியர்கள் , 166 ஆசிரியர்கள் , 31பொது பார்வையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் , 25 அரசுபள்ளி மற்றும் 29 தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் தங்களுடைய 67 அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லூரியின் சார்பாக பங்கு பெற்ற அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி