திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரியில்லை எனக் கூறி பள்ளி மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து வகுப்புகளை புறக்கணித்து பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை எனவும் புகார் கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறைகள் முறையாக தளம் அமைக்கப்படவில்லை எனவும் ஓடுகள் வேயப்பட்டிருந்த நிலையில் வெயிலிலும் அவதியுற்று வந்ததாகவும் தற்போது வரவுள்ள மழைக்காலத்திலும் அவதிப்படும் சூழல் ஏற்படும் என புகார் தெரிவித்தனர். சாலையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி புது நகர் காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மாணவர்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை பள்ளிக்கு செல்வதில்லை எனக்கூறி பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு